search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடகு மாவட்டம்"

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டியுள்ள குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. #KodaguFloods
    மைசூர்:

    கடந்த ஒரு மாதமாக கேரளாவிலும் கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்தது. கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய மழை கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள குடகு, உடுப்பி, மைசூர் மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

    காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் புதைந்தன. அதில் வசித்த மக்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

    தேசிய பேரிடர் மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள். நேற்று மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் குடகு மாவட்டத்தில் வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார். அவரது சுற்றுப்பயண திட்டத்தை முறையாக வகுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கும் மாநில சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவில் வைரலாக பரவியுள்ளது.

    நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயண திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தான் தயாரித்தது. ஆனால் நிர்மலா சீதாராமன் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து இருப்பது அவமானப்படுத்தும் செயல் என்று மாநில அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #KodaguFloods
    குடகு மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்றும், நிவாரண முகாம்களிலும் வகுப்பு நடத்தப்படும் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார். #Kodaguflood #kumarasamy
    பெங்களூரு :

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்-மந்திரி குமாரசாமி அங்கு 2 நாட்கள் ஹெலிகாப்டரில் பறந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அங்கு மழை குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகிறது.

    இந்த நிலையில் குடகு மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேஷ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை குமாரசாமி நேற்று தொடர்பு கொண்டு நிவாரண பணிகள் குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். இதுபற்றி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு வெந்நீர் வழங்க கியாஸ் மூலம் சுடுநீராக்கும் சாதனம், சமையல் கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க குடகில் 5 இடங்களில் கிடங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த கிடங்குகள் மூலம் 100 வாகனங்களில் நிவாரண பொருட்களை எடுத்துச் சென்று வினியோகம் செய்யப்படுகிறது.



    பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தார்ப்பாய் மற்றும் பிளாஸ்டிக் பைகள் தேவைப்படுகிறது. இதுதவிர மற்ற பொருட்கள் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளன. குடகு மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல்-டீசல் மக்களுக்கு கிடைப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்படி உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    50 ஆயிரம் உணவுப்பொருள் தொகுப்பை மக்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 61 பள்ளிகளை தவிர மற்ற இடங்களில் பள்ளிகளை இன்று(வியாழக்கிழமை) திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி குழந்தைகளுக்கு புதிதாக 5 ஆயிரம் பாடப்புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும் அங்கேயே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை சரிசெய்யும்படி பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இனி வரும் நாட்களில் சாலைகளில் இதுபோன்ற சேதங்களை தடுக்க பாதுகாப்பு சுவர்கள், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வரும் நாட்களில் இயற்கை பேரிடர்களை தடுக்கும் வகையில் மழை நீர் எந்த பிரச்சினையும் இன்றி செல்ல திட்டமிட்டு கால்வாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்ய அதற்கான நிலத்தை அடையாளம் காணும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள், பயிர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்படும்.

    வெள்ளத்தால் நில ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்கள் வழங்கப்படும். சாலைகள் சேதம் குறித்து பறக்கும் கேமரா மூலம் ஆய்வு நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Kodaguflood #kumarasamy
    ×